Wednesday, December 8, 2010
பக்ருவாகனன் கருமம் செய்தல்
கருடன், பரமபதியை தொழுது பரமபுருஷா! இதற்கு முன்பு பிரேத ஜென்மம் அடைந்தவனைக் குறித்த சரித்திரம் ஏதாவது உள்ளதா? அத்தகைய சரிதரமிருந்தால், அதைச் சொல்லியருள வேண்டும் என்று வேண்டினார்.
ஸ்ரீமந் நாராயண பகவான், கருடனை நோக்கி கூறலானார்:
வைன தேயனே! நீ இப்போது கேட்ட கேள்வி நல்லதொரு கேள்வியாகும். இதற்கு ஒரு கதை உள்ளது. கவனமாகக் கேள் என்றார். திரோதாயுகத்தில் பக்ருவாகணன் என்ற அரசன் இருந்தான். அவன் தன நித்தியகர்மங்களை நியமனத் தவறாமல் செய்து வந்தான். பெரியோர்களால் கொண்டாடப்பட்ட அவன் மகோதயம் என்ற நகரத்திலிருந்து உலகத்தை ஆண்டு வந்தான். அவன் ஒரு நாள் வேட்டையாட விரும்பி, தன படை வீரர்கள் சிலருடன் காட்டுக்குச் சென்று வேட்டையாடினான். அப்போது அவன் பார்வையில் புள்ளிமான் ஒன்று தென்பட்டு, அந்த மான் மீது அம்பெய்தான். அடிப்பட்ட அந்த மான் கீழே விழுந்து எழுந்து ஓடிற்று. மறுபடியும் அம்மான் மீது அம்பெய்தான். அந்த அம்பு குறிதவறாமல் அந்த மான் மீது பாய்ந்தது. அம்பு பாய்ந்த புண்ணிலிருந்து வழிந்து ஒழுகிய ரத்தமானது சிதறியது. அந்த மான் மீண்டும் ஓடி எங்கோ மறைந்தது. அரசன் மானின் உடலிலிருந்து தரையில் விழுந்திருந்த ரத்த சுவட்டைப் பின்பற்றிச் சென்று, நெடுந் தூரம் நடந்து, வேறு ஒரு வனத்தையடைந்தான். அங்கும் அந்த புள்ளிமான் காணாததாலும், வழிநடந்த சோர்வாலும் மிகவும் சோர்வடைந்தான். அரசனுக்குரிய பசியை விடத்தாகம் நெஞ்சை வறளச் செய்தது. தண்ணீருக்காக அந்த வனம் முழுவதும் ஒரு தடாகத்தை தேடியலைந்து, ஒரு தாமரைப் பொய்கையைக் கண்டு அதனுள்ளிறங்கி, நீராடி, புனல் பருகிக் களைப்பு நீங்கினான். அங்கிருந்த ஆலமரம் ஒன்றின் கீழ் அமர்ந்து, தன்னுடன் வேட்டையாட வந்தவர்களுக்காக காத்திருந்தான். நெடுநேரமாகி அந்திமங்கியது. இருள் கவிந்தது.
அப்போது எழும்பும் நரம்பும் தசையும் இல்லாத பிரேதம், பல பிரேதங்களோடு பயங்கரமாக கூச்சல் இருப்பதைக் கண்ட அரசன் பயமும் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தான். அந்த பிரேத ஜென்மம், அரசனுடன் நெருங்கி வந்து அரசனே! உன்னைக் காணப் பெற்றதால் இந்தப் பிரேத ஜென்மம் நீங்கி நற்கதியை அடைவேன் என்று வணக்கமாக கூறியது. அரசன் அந்த பிரேத ஜென்மத்தைப் பார்த்து, நீ யார்? எவ்வாறு பேசுகிறாய்? உன் வரலாறு என்ன? அதை விளக்கமாக சொல்ல வேண்டும் என்று கேட்டான்.
உடனே அந்தப் பிரேத ஜென்மம், அரசனை நோக்கி, வேந்தனே! என் சரித்தரத்தை சொல்கிறேன், நீங்கள் கருணையுடன் கேட்க வேண்டும். வைதீசம் என்று ஒரு பட்டணம் உண்டு. அந்தப் பட்டணத்திலே இரதகள, துரகபதாதிகள் எப்போதும் நிறைந்திருக்கும். அந்த நகரத்தில் தான் நான் வைசிய குலத்தில் பிறந்து வளர்ந்து திருமணஞ் செய்து சுகமாக வாழ்ந்து வந்தேன். என் பெயர் தேவன்! நான் என் வாழ்நாள் முழுவதும் தேவாராதனை, பிரதானுஷ்டானம் செய்து வந்தேன். பெரியோர்களை வணங்கி தேவாலயம் பிரமாலையம் முதலியவற்றை சீர் செய்து புதுப்பித்தேன். ஏழைகளையும் அனாதைகளையும் அகதிகளையும் நாதனற்றவர்களையும் ரட்சித்து, சகல ஜீவர்களுக்கும் என்னால் இயன்ற அளவுக்கு நன்மைகளையே செய்து என் வாழ்நாள் முடிந்து நான் மடிந்தேன். புத்திரன் சுற்றத்தார் யாருமில்லை. அதனால் எனக்கு யாரும் கர்மம் செய்யாததால் நான் இத்தகைய பிரேத ஜென்மத்தை அடைந்தேன். இந்த பிரத ஜென்மத்தை நான் அடைந்து வெகு காலமாயிற்று. இந்த ஜென்மத்தொடு நான் மிகவும் வருந்துகிறேன். இறந்தவனுக்கு செய்ய வேண்டிய சமஸ்க்காரம், சஞ்சயனம், விருஷோர்சர்க்கம், சோடசடம், சபிண்டிகரணம், மாசிகம், சிரார்த்தம் முதலிய சடங்குகளை இறந்தவனின் மகன், அல்லது மற்ற உறவினர்கள் ஒருவருமே செய்யாவிட்டால், இறந்தவன் பிரேத ஜென்மத்தையே அடைவான். உலகத்தை ஆளும் உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. நீ குடிமக்களின் காவலன் உறவினன். ஆகையால், அடியேனுக்கு செய்தற்குரிய கர்மங்களை செய்து, இந்தப் பிரேத ஜென்மத்தை நீக்க வேண்டும். என்னிடம் சிறப்பான நவரத்தினங்களில் சிறந்த மாணிக்கம் இருக்கிறது. அதை பாதகாணிக்கையாக ஏற்றுக் கொள்வாயாக என்று பிரேத ஜென்மம் அரசனிடம் கொடுத்தது.
அரசன் அந்த பிரேத ஜென்மத்தை நோக்கி, பிரேதமே! நான் எப்படி கருமஞ் செய்ய வேண்டும்? இது எப்படி நீங்கும்? பிரேத ஜென்மத்தை நீ எவ்வாறு அடைந்தாய்! அவற்றை நீ எனக்கு சொல்ல வேண்டும், என்று அரசன் கேட்டான்.
அரசே! அந்தணோத்தர்களின் பொருள்களையும் தெய்வ சொத்துக்களையும், ஸ்த்ரி, பாலகன், அந்தகன், ஊமை, செவிடன் ஆகியோர்களின் பொருள்களை அபகரித்தவன் எவனாயினும், எத்தகைய தானங்களைச் செய்தவனாயினும் இத்தகைய பிரேத ஜென்மத்தை அடைவான். தன் கோத்திரத்தில் பிறந்த பெண்ணையும், பிறனுக்குரியவளையும் விரும்பியவன் பிரேத ஜென்மத்தை அடைவான். தாமரை மலர்களையும் பொன், பொருள், ஏழைகளை ஏமாற்றி பொருள்களை அடைந்தவர்களும் திருடினவர்களும் பிரேத ஜென்மத்தை அடைவார்கள். போரில் புறங்காட்டி ஓடியவனும், செய்நன்றி மறந்தவனும், நல்லது செய்தவனுக்கே தீமைகளைச் செய்தவனும் பிரேத ஜென்மத்தை அடைவார்கள் என்று கூறியது. பிரேத ஜென்மம் எப்படி நீங்கும்? அத்தகயவனுக்கு அத்தகைய கர்மத்தை செய்ய வேண்டும்? எவ்விதம் செய்ய வேண்டும் என்பதைச் சொல் என்றான். வேந்தனே! இதைப் பற்றி சுருக்கமாக சொல்கிறேன் கேள்! நாராயனபலி சகிதனாய், ஸ்ரீமான் நாராயனைப் போல திவ்விய மங்கள விக்கிரகம் ஒன்றைச் செய்து, சங்கு சக்கர, பீதாம்பரங்களைக் கொண்டு அலங்காரஞ் செய்து, கிழக்கு திசையில் ஸ்ரீதரனையும், தெற்குத் திக்கில் மஹா சூரனையும், மேற்குத் திசையில் வாமனனையும், வடக்கில் கதாதரனையும் நடுவில் பிரமருத்திரயரோடு ஸ்ரீ மஹா விஷ்ணுவையும் நிலைநிறுத்தி, ஆராதனை செய்து, வளம் வந்து வணங்கி, அக்கினியிலே ஹோமஞ் செய்து, மீண்டும் நீராடி விருஷோர்சர்க்கம் செய்து, பதின்மூன்று பிராமணர்களை வருவித்து, அவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்து பிருஷ்டாணன் போஜனம் செய்வித்து, சய்யாதனம், கடகதானம் கொடுத்தால், மரித்தவன் பிரேத ஜென்மத்திலிருந்து நீங்குவான் என்று பிரேதம் கூறியது.
மன்னனித் தேடிக் கொண்டிருந்த அவனது பரிவாரங்கள் அவன் அமர்ந்திருந்த தடாக கரைக்கு வந்து கொண்டிருந்ததை பிரேதம் பார்த்து மறைந்து விட்டது. இது என்ன விந்தை! சேனை வீரர்களை கண்டதுமே பிரேத ஜென்மம் மறைந்து விட்டதே! அரசன் தன் சேனைகளோடு தன் நகரத்தை அடைந்தான். பிறகு அந்த பிரேத ஜென்மத்தைக் குறித்து அதற்குரிய கர்மங்களையும் தர்மனகளையும் முறைப்படி செய்தான். உடனே அந்த பிரேதம் தனுக்கு நேரிட்ட ஆவிப் பிறவியை நீங்கி நல்லுலகை அடைந்தது என்று திருமால் கூறினார்.
அதைக் கேட்டதும் கருடன் ஜெகத்காரணனை நோக்கி, இவை தவிர வேறு என்ன கர்மங்களை செய்தால் பிரேத ஜென்மம் நீங்கும்? அதனையும் எனக்கு கூறியருள வேண்டும் என்று வேண்டினான்.
அதற்க்கு ஆழிவண்ணன், கருடா! எண்ணெய் நிறைந்த ஒரு குடத்தைப் பெரியோர்களுக்குத் தானம் கொடுத்தாலும் சகல் பாவங்களும் நசித்துப் பிரேத ஜென்மமும் நீங்கி விடும். மரித்தவன் இன்பமுடன் மீலாவுலகை அடைவான். குடங்களில் பாலும் நெய்யும் நிரம்ப வார்த்து திக்கு பாலகர்களையும் அஜசங்கரரையும் ஸ்ரீஹரியையும் ஆராதனை செய்து அக்குடங்களை தானம் கொடுப்பது மிகவும் சிறப்புடையதாகும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் நற்பனி
ReplyDelete