Wednesday, September 1, 2010

ஸ்ரீ கருடப் புராணம்

பறவை வேந்தனான கருடன் ஸ்ரீ பரமாத்வாவை நோக்கி, ஒ ஜெகன்னாதா! பரந்தாமா! ஸ்ரீ ஹரியே! உலகத்தில் ஜீவர்கள் ஏன் பிறக்கிறார்கள்? என்ன காரணத்தால் சுவர்க்க நரகங்களை அடைகிறார்கள்?. எந்தப் புண்ணியத்தைச் செய்தால், இன்ப வீடான தேவர்களின் உலகை அடைவார்கள். எத்தகைய கர்மங்களால் பாவங்கள் நிவர்த்தியாகும். இறக்கும் வரை யாரை நினைத்தால் நற்கதி கிடைக்கும்? இவற்றையெல்லாம் அடியேனுக்குத் தெளிவாகக் கூறியருள வேண்டும் என்று வேண்டினான்.
                            ஸ்ரீ மந்நாராயணர் எல்லோர் மனதிலும் புகுந்து அனைத்தையும் பார்க்க வல்லவரும், எல்லா செயல்களுக்கும் காரணமாகியவருமான ஸ்ரீ ஹரி பகவான் புன்னகையுடன் பறவை வேந்தனை நோக்கிக் கூறலானார்.
                           கருடனே! நீ நல்லதொரு கேள்வியை நல்ல முறையில் கேட்டு விட்டாய். அது உலகினருக்குப் புரியாத ரகசியங்கள். அவற்றை நாம் கூறுவோம். கவனமாகக் கேள். எத்தனை நாட்கள் வாழ்ந்தாலும் என்றாவது இறப்பது நிச்சயம் என்பதை யாரும் நினைப்பதில்லை. உயிர்களைக் கவர்ந்து செல்லும் கூற்றவன்(எமன்) என்றும் விடமாட்டான் என்ற உண்மையை உணர்ந்த மனிதன் பயந்தாவது நல்ல தருமங்கள் இயற்றி அறநெறிப்படி வாழ்வான். அவன் தர்மங்களை ஒழுங்காகச் செய்து வருவானாகில், அக்கருமங்களே அவனைக் காப்பாற்றும். தனக்குரிய கர்மங்களை ஒருவன் முறைப்படிச் செய்கிறானோ, அவனே எல்லாவிடத்திலும் மேன்மையடைவான்.
                           பிரம்ம, ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என நான்கு வருணத்தார் இருக்கிறார்கள். பிராமணருக்கு ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்று ஆறு கர்மங்கள் உள்ளன. ஷக்த்திரியருக்கு ஓதல், வேட்டல், ஈதல், உலகோம்பல், படைபயித்றல், பொறுத்தல் என்று ஆறுவகைக் கருமங்கள் உண்டு. வைசியருக்கு ஓதல், கேட்டல், பொருளீட்டல், ஈதல், பசுக்களைக் காத்தல், ஏரூழல் என ஆறு கர்மங்கள் உண்டு. சூத்திரருக்கு ஓதல், முன்னவருக்கு பணியாற்றல், பொருளீட்டல், உழுதல், பசுகாதல், வேட்டல் முதலிய ஆறு கர்மங்கள் உண்டு. அவரவர் குலமரபுக்குரிய ஒழுக்கபடி நடப்பதே பெரிய தவமாகும். அதில் வழுவாது ஒழுங்காக வாழ்பவர் எவரோ, அவரே போகத்தையும் யோகத்தையும் ஒருங்கே அடைந்து நெடுநாள் வாழ்ந்து, இறுதியில் தமக்குரிய உலகை அடைவார்கள். அவாவை ஒழித்து பட்ற்றற்றவர்களே பேரறிஞர்களாவர். என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார்.

No comments:

Post a Comment