Saturday, October 2, 2010

பிரேத ஜென்மம் விளைவிக்கும் துன்பம்.

கருடன் கேசவனைத் தொழுது ஸ்வாமி! பாவங்களில் எத்தகைய பாவத்தை செய்தவன், பிரேத ஜென்மத்தை அடைகிறான்? அந்த பிரேத ஜென்மத்திலிருந்து எப்படி நீங்குகிறான்? அந்த பிரேத ஜென்மதொடு பூவுலகில் சஞ்சரிப்பது உண்டா அல்லது யமனுடைய காவலிலேயே கிடப்பானோ? இவற்றையெல்லாம் அடியேனுக்கு விளக்கமாக சொல்ல வேண்டும் என்று வேண்ட, திருமால் கருடனை நோக்கிக் கூறலானார்.
                                     வைன தேயனே! பிறருடைய பொருளையும் மனைவியையும் அபகரிப்பவன் எவனோ, அவனே இறந்த பிறகு வேறு சரீரத்தை யடையாமல் காற்று ரூபமாக பிரேத ஜென்மதையடைந்து பசி தாகத்தோடு வருந்தி யமனுடைய காவலையும் நீங்கி எங்கும் திரிவான். யார் ஒருவன் இறந்தவர்களின் பொருள்களை அபகரித்துக் கொள்பவன், தீவாய் நரகங்களை யெல்லாம் அனுபவிப்பான். மோசம் செய்து அபகரிக்கும் பாவியினும் கொடும்பாவி ஒருவனும் இருக்க மாட்டான். பிரேத ரூபத்தில் யாரையும் நிம்மதியாக இருக்கவிட மாட்டான். பித்துக்களின் தினத்தில் பிதுக்களை வீட்டுக்குள்ளே போக விடாமல் தடுத்து துரத்துவான். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எதையும் அனுபவிக்க விடமாட்டான். தன் புத்திரன் முதலியோருக்கு சந்ததி உண்டாகாமல் வம்சம் நாசமடையும் படி செய்வான். அவர்களுக்கு பல துன்பங்களை உண்டாக்கி வருத்தப்படுவான் என்று கூறி அருளினார்.
              அப்போது பறவை வேந்தன் பெருமாளை நோக்கி, ஆதிமூர்த்தி! பிரேத ஜென்மமடைந்தவர் வேறு என்ன செய்வான்? எவ்விதமாக தோற்றமளிப்பான்? பிரேத ஜென்மம் அடைந்திருக்கிறான் என்பதை எப்படி அறிய முடியும்? இவற்றைத் தயவு செய்து நவின்றருள வேண்டும் என்று வேண்ட ஸ்ரீமன் நாராயணர் கூறுகிறார்.
                     வைன தேயா! பிரேத ஜென்மம் அடைந்தவன் தான் சார்ந்த குலத்தையே அதிகப்பிடிப்பான். தருமங்கள். தானங்கள் செய்பவருக்கும் ஹரி நாம சங்கீர்த்தனம் செய்பவருக்கும் திருவன, பத்ரி முதலிய ஸ்தலங்களுக்குத் தீர்த்த யாத்திரை ஷேச்த்ராடனம் முதலியவற்றைச் செய்பவருக்கும் பிரேத ஜென்மம் அடைந்தவனால் ஒரு துன்பமும் நேராது. நற்கருமம் எதையும் செய்யாதவனுக்கும், பாகவதரை நிந்திப்பவனுக்கும் தெய்வ பக்தி இல்லாதவனுக்கும், புலால் உண்பவனுக்கும் மது அருந்துவோன்னுக்கும், பொய் சொல்பவனுக்கும் பிரேத ஜென்மம் அடைந்தவனால் அதிகமான துன்பங்கள் உண்டாகும். பாவங்களையே செய்வதும், குழந்தைகள் பிறந்து பிறந்து இறப்பதற்கும், சுற்றத்தாரோடு ஒற்றுமையில்லாமல் மனம் வேறுபட்டு வாழ்வதற்கும், பசுக்களை போஷிக்க முடியாமற் போவதற்கும், நண்பனோடு விரோதிக்க நேரத்தாலும், வைதிக உபவாச தினமாகிய ஏகாதசி தினத்தில் அன்னம் உண்ணுதலும், ஹரி பக்தி செய்ய முடியாமல் வாழ்நாள் வீணாவதற்கும் ஜெப ஓமங்களைச் செய்ய முடியாமல் போவதற்கும், தந்தை தாயாரை இகல்வதர்க்கும், அயலாரை கொல்ல முயற்சிப்பதற்கும், இழிந்தோர் செய்யும் தொழிலைச் செய்து பிழைக்க நேரிடுவதர்க்கும், அதர்மங்களையே எண்ணுதலும், பிதுர் கர்மங்களை விக்கினத்தால் தடைபட்டு குறைபட்டு போதலும், புத்திரன் பகைவனைப் போல தூசிப்பதர்க்கும், மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாமல் நெடுநாட்கள் பிரிந்து வாழ்வதற்கும்.. இவைகளெல்லாம் பிரேத ஜென்மத்தை அடைந்தவனாலேயே தோன்றுவனவாகும். கருடா! யாருக்கு பிரேத ஜென்மதோஷம் நேரிட்டிரிகிறதோ, துக்கமும் துன்பமும் சூழ்ந்து கொண்டே இருக்கும்.
                                            பிரேத ஜென்மத்தை யடைந்தவன் பயங்கரமான முகத்தோடும் வாள் போன்ற பற்களோடும் தன் குடும்பத்தாரின் கனவில் தோன்றி, அயோ! என்னைக் காப்பாற்றுவோர் யாருமில்லையா? பசிதாகத்தோடு வருந்துவான். என் பிரேத ஜென்மம் நீங்கவில்லையே என்று கதறுவான் என்றார் திருமால்.

1 comment: